search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி டெல்டா"

    காவிரி டெல்டாவை பாதுகாக்க ஜூன் 12-ந் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாய அமைப்புகள் வருகிற 12-ந் தேதி திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளன. இந்த போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டாவை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டப்பூர்வமான இயக்கங்களையும், போராட்டங்களையும் மக்கள் நீதி மய்யம் ஆதரிக்கும். உண்ணாவிரத போராட்டத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் இல்லை என்றாலும், உங்கள் (பி.ஆர்.பாண்டியன்) அமைப்பின் சார்பில் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்து சொல்வது எனது கடமை.

    ஜூன் 12-ந் தேதி தாங்கள் (பி.ஆர்.பாண்டியன்) மேற்கொண்டுள்ள நிகழ்வில், வேறு பணிகள் காரணமாக என்னால் நேரில் பங்கேற்க இயலாது. எனினும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் தீர்ப்பை பெற்றுத்தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் 24-ந்தேதி முதல் 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நடத்திய சட்டப் போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாகக் காத்து நிற்கின்றன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் என்ற பதவியிலும் இருந்து, ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி, சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக் கும் தீர்ப்பைப் பெற்றுள்ளது, அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    உடனடியாக காவிரி நீர்ப் பங்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயப் பெருமக்களுக்குப் பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, அதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

    இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலன்காக்க நடைபெற்று வரும் தமிழ்நாடு அரசு, இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது.

    காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து, காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் சட்டப் போராட்டம் நடத்தி சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக் கும் தீர்ப்பைப் பெற்றுத்தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 24-5-2018 முதல் 27-5-2018 வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    கூட்டம் நடைபெறும் தேதி, இடம், தலைமை தாங்குவோர் விவரம் வருமாறு:-

    24-5-2018 - கரூர் - அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர். 24-5-2018 - அரியலூர் - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் தாமரை எஸ்.ராஜேந்திரன், ஆர்.டி.ராமச்சந்திரன்.

    25-5-2018 - தஞ்சாவூர் - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. 25-5-2018 - புதுக்கோட்டை - அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து. 26-5-2018 - நாகப்பட்டினம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஓ.எஸ்.மணியன். 26-5-2018 - திருச்சி - பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, ப.குமார் எம்.பி., டி.ரத்தினவேல் எம்.பி. 27-5-2018 - திருவாரூர் - துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.காமராஜ். 27-5-2018 - கடலூர் - அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், ஆ.அருண்மொழிதேவன் எம்.பி.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் அனைத்து நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கட்சித் தொண்டர்களும், விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×